கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலச்சரிவில் சிக்கி, இதுவரை சுமார் 316 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
மாயமானவர்களை மீட்க தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பம் மூலம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முண்டக்கை பகுதியில் இராணுவத்தினரால், தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு, மீட்புப்பணிகள் விரைவுபடுத்தபட்டுள்ளன.
இந்நிலையில், நேற்றைய நாள் (1.8.24), மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சென்றனர்.
அதனைத்தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி மேற்பார்வையிட இருக்கிறார்.