அரசியல்

வயநாடு மக்களை செயற்கைப் பேரிடரால் வறுத்தெடுக்கிறது ‘ஒன்றியம்’ - அமித்ஷாவின் செயலை விமர்சித்த முரசொலி !

வயநாடு மக்களை செயற்கைப் பேரிடரால் வறுத்தெடுக்கிறது ‘ஒன்றியம்’ - அமித்ஷாவின் செயலை விமர்சித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (02.08.2024)

ஏன் நிலமே? இயற்கையே!

அகழ்வாரைத் தாங்கும் நிலமே? ஏன் அழிவை ஏற்படுத்தி விட்டாய்?

மக்களை வாழ்விக்கும் மண்ணே, ஏன் மரணத்தைப் பரிசாகத் தந்தாய்?

இனிய இயற்கையே! உனது முகம் வயநாட்டில் இப்படி ஏன் மாறியது?

நித்திரையில் இருந்த அப்பாவி மக்களை நிர்கதியாய் விட்டது ஏன் நிலமே?

வயநாட்டில் இருந்து வரும் செய்திகள் அனைத்தும் வருத்தமும் சோகமும் துக்கமும் துயரமும் இப்படி அனைத்தும் கலந்த எல்லாமுமாக இருக்கின்றன. முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி ஆகிய மூன்று கிராமங்கள் மொத்தமாக நிலச்சரிவில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வீடுகள் தரைமட்டம் ஆகி விட்டது. இதுவரை 270 பேரை உயிரற்ற உடல்களாக எடுத்திருக்கிறார்கள். தோண்டத் தோண்ட மனித உடல்கள். பொக்லைன் இயந்திரங்கள் மண்ணை அள்ளுவதைப் போல மனித உடல்களை அள்ளுகிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களே கலங்கி நிற்கிறார்கள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மரணமடைந்த உடல்களை எடுத்துள்ளார்கள். குழந்தைகளை கட்டிப் பிடித்தபடி மரணித்த உடல்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் நாற்காலியில் அமர்ந்தபடி 3 பேரை மண் மூழ்கடித்துள்ளது. அப்படியே நாற்காலியோடு எடுக்கப்பட்டுள்ளார்கள்.

தப்பியோட வழியின்றி மண்ணும் சகதியும் மழையும் மக்களைச் சூழ்ந்துவிட்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் வீட்டுக்குள் இருந்துள்ளார்கள். இன்னும் எத்தனை பேர் உள்ளே சிக்கி இருக்கிறார்களோ? இன்னும் எத்தனை பேர் மூச்சு விட்டுள்ளார்களோ? இன்னும் எத்தனை பேர் மூச்சு விட்டபடியே உள்ளேயே உழன்று கொண்டிருக்கிறார்களோ? அதிகமான வெள்ளத்தை காட்டாற்று வெள்ளம் என்பார்கள். இங்கே காட்டையே வெள்ளம் அடித்துச் சென்றிருக்கிறது. சாலைகள், பாலங்கள், வீடுகள், விடுதிகள், கடைகள், வாகனங்கள் என எதிர்கொண்ட அனைத்தையும் வாரிச் சுருட்டி விட்டுப் போய்விட்டது வெள்ளம். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களது உடல்கள், 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்பதை வைத்து இது எத்தகைய கோரத் தாண்டவம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

வயநாடு மக்களை செயற்கைப் பேரிடரால் வறுத்தெடுக்கிறது ‘ஒன்றியம்’ - அமித்ஷாவின் செயலை விமர்சித்த முரசொலி !

முண்டக்கை, சூரல் மலை, மேம்பாடி மக்களது உடல்கள் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளர்மலை, அட்டமலை, நிலம்பூர், சாலியாறு வரை போய்க் கிடக்கின்றன. குறுக்கே சில ஆறுகள் இருப்பதால் அந்த ஆற்றோடு போன உடல்களும் உண்டு. சிறு நீர்வீழ்ச்சிகள் இருந்ததால், அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து பாறையில் சிக்கிய உடல்களும் உண்டு. கை,கால், தலை இல்லாத உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் ஆட்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கனமழையும் வெள்ளமும் நிலச்சரிவும் ஒன்றாக ஏற்பட்டதன் விளைவு இது. மழையும், நிலச்சரிவும் வழக்கமாக நாம் பார்ப்பதுதானே என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் ஜூலை 29 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏற்பட்டது இதுவரை பார்க்காத வேகமும் காலமும் ஆகும். 48 மணிநேரத்தில் 57 செ.மீட்டர் அளவுக்கு அதி கனமழை கொட்டி இருக்கிறது. இந்தப் பகுதி செம்மண் பகுதி ஆகும். அதிகப்படியான மழை நீர் தேங்கி செம்மண் இறுக்கத்தைக் குலைத்து உடைத்துவிட்டது. இது குறித்த எச்சரிக்கை அங்கு முன்கூட்டியே தரப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

வயநாடு மக்களை செயற்கைப் பேரிடரால் வறுத்தெடுக்கிறது ‘ஒன்றியம்’ - அமித்ஷாவின் செயலை விமர்சித்த முரசொலி !

இவ்வளவு பெரிய சோகப் பேரழிவு நேரத்திலும் கேரள அரசைக் குறை சொல்வதில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறியாக இருக்கிறார். 100 கோடி ரூபாய் பணத்தை அறிவித்து, மொத்த ஒன்றியப் படைகளையும் உள்ளே இறக்க முன்வராத அமைச்சர் அமித்ஷா, “ஏழு நாட்களுக்கு முன்பே கேரள அரசை எச்சரித்தோம” என்கிறார். “இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டும்தான் விடுத்தது. ஆனால் அங்கு 500 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பிறகுதான் சிவப்பு எச்சரிக்கை விடுத்தார்கள்” என்று சொல்லி இருக்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

நிலச்சரிவு நடந்த 29ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று மட்டுமே உள்ளது. நிலச்சரிவு நடந்த இடத்தில் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படவில்லை.

உடனடியாக 5 கோடி ரூபாயை கேரள அரசுக்கு வழங்க உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். உடனடியாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவை கேரளாவுக்கு அனுப்பி பினராயி விஜயனிடம் காசோலையை வழங்கச் சொன்னார் முதலமைச்சர். ‘உடுக்கை இழந்தவன் கை போல, இடுக்கண் களையும் நட்புக்கு’ உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடந்து கொண்டார்கள். ஆனால் அமித்ஷா, இந்த ‘வேட்டி’யையும் கட்ட விடாமல் காலால் மிதிப்பது போன்ற காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார். குஜராத்தில் ஒரு பாதிப்பு என்றால் 24 மணிநேரத்துக்குள் பிரதமர் போயிருப்பார். ஆயிரம் கோடி அறிவித்திருப்பார். தமிழ்நாட்டில் நடந்த இரண்டு பேரிடர்களுக்கும் எதுவும் செய்யாத ஒன்றிய அரசு, வயநாடு மக்களையும் செயற்கைப் பேரிடரால் வறுத்தெடுக்கிறது.

‘ஒன்றியம்’ இப்படித்தான் இருக்கும் என்பது நமக்குத் தெரியும்! ஆனால், மக்களோடு ஒன்றி வாழ்ந்த நீயுமா மக்களைச் சோதிக்கிறாய் நிலமே? இயற்கையே?!

banner

Related Stories

Related Stories