தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு காணொளி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த காணொளியில் பேசியதாவது, "எனது அழைப்பை ஏற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் இணைந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதன் மூலமாக அரசு பள்ளியின் மேம்பாட்டை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு வழங்கியிருக்கிறது நமது திராவிட மாடல் அரசு.
இதன் அடுத்த கட்டமாக பள்ளி மேலாண்மை குழுவில் அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இணைய இருக்கிறார்கள். இதன் மூலமாக பள்ளிக்கும், பொது சமூகத்திற்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள், மாணவர்களை விட அரசு பள்ளிகளின் விழுதுகளாக முன்னாள் மாணவர்களும் இணைய இருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு சீரமைப்பு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் போன்று அரசுடனும், பள்ளிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும்.
எனவே பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பள்ளி மேலாண்மை மறு சீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அரசு பள்ளியை செம்மையாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். உங்களை அன்புடன் அழைக்கிறேன் உங்களுக்கு உறுதுணையாக நானும் பள்ளிக்கு உறுதுணையாக செயல்படுவோம்." என்றார்.
ஆகஸ்ட் 2-ந் தேதி பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் அவர்கள் பேசிய காணொளியை எக்ஸ் தளத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார்.