சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல் கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
சென்னை மாநகரம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளின் எதிர்கால மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிலையாக நீடிக்கும் பொதுப்போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்ட திட்டமானது இந்தியாவிலேயே ஒரே தடவையில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாகும்.
சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கி.மீ), கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47.0 கி.மீ), என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்களை ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (21.7.2024) சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து குழுமத்தின் ஆய்வில் உள்ள ஒருங்கிணைந்த நகர்வு திட்டமான பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பொதுவான நகர்வு அட்டை, பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பின் ஒருங்கிணைப்பு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை மேம்படுத்தல் ஆகியவை குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டங்கள், ஓசூர் மற்றும் பொம்மசந்திராவை இணைக்கும் பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சென்னை பெருநகருக்குள் உருவாக்கப்படவுள்ள எதிர்கால மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் அவற்றை நடைமுறை படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அத்துடன் சென்னை மாநகரம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளின் எதிர்கால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய தயாரிக்கப்பட்டுள்ள தாம்பரம் வழியாக விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான 15.5 கி.மீ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, 16.07 கி.மீ நீளத்திலான கோயம்பேடு - ஆவடி வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, 43.63 கி.மீ நீளத்திற்கான பூந்தமல்லி முதல் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்ட விமான நிலையம் வரையிலான வழித்தட விரிவான திட்ட அறிக்கை ஆகியவை குறித்தும், 10 கி.மீ நீளத்திலான மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் நல்லூர் வரையில் பெருந்திரள் துரிதப் போக்குவரத்து அமைப்பினை செயல்படுத்துவதற்கான போக்குவரத்து ஆய்வு, 26 கி.மீ நீளத்திலான வேளச்சேரி வழியாக தாம்பரம் முதல் கிண்டி வரையிலான வழித்தடத்திற்கான போக்குவரத்து ஆய்வு மற்றும் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகளை மறுமதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகள் குறித்தும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெஸ்ட்காட் சாலையின் அடியில் ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில், 150 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் மற்றும் 21.5 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு வரும் ராயப்பேட்டை மெட்ரோ நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
மேலும் மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்- 2, வழித்தடம்-3 -இல் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை வரை 910 மீட்டர் சுரங்கம் அமைக்கும் பணியை ராயப்பேட்டையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ் பேரூரில் ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ இரயில் பாதை (Alapakkam Double Decker) அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆலப்பாக்கம் இரண்டடுக்கு அமைப்பு இந்தியாவிலேயே முதலாவது வகை ஆகும். சுமார் 3.75 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ள இப்பகுதியில் வழித்தடம் 4-ற்கு மேல் வழித்தடம் 5 செல்கிறது. இதனால் இடப்பயன்பாடு மற்றும் செலவு குறைகின்றது. இது ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் இடங்களில் அமையும் நிலையங்களை இணைக்கிறது.
பின்னர், அமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி அரியமந்தநல்லூர் கிராமத்தில் ரூபாய் 187 கோடி செலவில் 40.5 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பூந்தமல்லி பணிமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணிமனையில் நிர்வாக கட்டடம், பணிமனை கிடங்கு, பணிமனை கூடம், இரயில்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிறப்பு வசதிகளான ஒரு சோதனைத்தடம் மற்றும் தானியங்கி இரயில்கள் கழுவும் அமைப்பு போன்ற 17 கட்டடங்கள் உள்ளன.
இப்பணிமனையில் 6 பெட்டிகள் கொண்ட 56 இரயில்கள் வரை பராமரிக்கப்படவுள்ளன, இந்த இரயில்கள் தானியங்கி அமைப்புகளை கொண்டதுடன் ஓட்டுநர் இல்லாத இரயில்கள் இயக்க அமைப்பினை கொண்டுள்ளது.
தற்போது 82% கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ளன. இதில் இரயில் நிறுத்தும் பகுதி, சோதனை தடம் ஆகிய பணிகள் 6 மாதத்திற்குள் இறுதிக்கட்டத்தை அடையும்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துரிதமாக பணிகளை முடிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.