தமிழ்நாடு

"2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்" - கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை !

"2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்"
  - கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைதித்திருக்கும் நிலையில், இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் :

காத்திருக்கும் பணிகள் ஏராளம்!

திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கோபாலபுரத்தில் உள்ள ஒரு முடி திருத்தகத்தில் இன்றைய கழகத்தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’தான் 1980-இல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி என்னும் அதிகாரப்பூர்வ அணியாக மாறியது. 1982-இல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட இன்றைய கழகத் தலைவர் அவர்கள், தன் இடைவிடா உழைப்பின் மூலம் கழக இளைஞர் அணியை வலிமை வாய்ந்த ஆற்றல்மிக்க அணியாக உருவாக்கினார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அதன் மூலம் நிதி திரட்டி கழகத்தலைமையிடம் ஒப்படைத்து, இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தை அணியின் வசமாக்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும், கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது அன்றைய ஆளும் அரசுகளின் மக்கள்விரோதப் போக்கை உறுதியுடன் எதிர்ப்பதாக இருந்தாலும், திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதாக இருந்தாலும் இன்றைய கழகத்தலைவர் தலைமையில், இளைஞர் அணி தொடர்ந்து முன்னணியில் நின்றது. கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர் அணியில் பயிற்சி பெற்ற பலர் தலைமைக் கழக நிர்வாகிகளாக, மாவட்ட - ஒன்றிய - நகர பகுதி - பேரூர் செயலாளர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஏற்றம் பெற்றனர். 30 ஆண்டுகள் இளைஞர் அணியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்த கழகத் தலைவர் அவர்கள், கழகத்தின் செயல்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்கள் பொறுப்பேற்று, சீரிய முறையில் பணியாற்றினார்.

"2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்"
  - கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை !

இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கழகத்தினரின் வேண்டுகோளின்படியும் தலைமைக் கழகத்தின் முடிவின்படியும் அதே ஆண்டு ஜூலை 4 அன்று மாநில இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்றேன். இது, இன்றைய கழகத் தலைவர் அவர்கள் வகித்த பொறுப்பு என்பதை மனதிலேந்திப் பணியாற்றத் தொடங்கினேன். 25 லட்சம் புதிய இளைஞர்களை கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்தோம். இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்தினோம். அன்று, நாம் எதிர்க்கட்சி என்றபோதிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கைவிடப்பட்ட நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் முதல், நீட் தேர்வை ஒழிக்க கையெழுத்து இயக்கம் வரையிலான போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

இணையத்தில் கழகத்தின்மீது சுமத்தப்படும் அவதூறுகளை முறியடிக்க, சமூகவலைத்தளத் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தோம். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று என்னும் உலகளாவிய நெருக்கடி. ஆனாலும், கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்கள் துயர் துடைத்தோம். தொகுதிதோறும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம், வாசிப்பை விரிவுபடுத்த சட்டமன்றத் தொகுதிதோறும் 'கலைஞர் நூலகம்', 'முரசொலி பாசறைப் பக்கம், ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்' என்று ஏராளமான பணிகளை முன்னெடுத்திருக்கிறோம். குறிப்பாக, 2007-இல் இன்றைய கழகத்தலைவரால் நெல்லையில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டின் தொடர்ச்சியாக, 2024-இல் சேலத்தில் இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்திக்காட்டினோம். கழகத்தலைவரின் வழிகாட்டுதலும் இளைஞர் அணித் தோழர்களின் உற்சாகமும் ஒத்துழைப்புமே இவற்றைச் சாதித்துக்காட்டின.

"2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்"
  - கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை !

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, ஒன்றியம் - நகரம் - பகுதி - பேரூர் வாரியாக திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறோம். இப்படி கழக இளைஞர் அணி ஆற்றிய பணிகள் ஏராளம் என்றாலும், காத்திருக்கும் பணிகளும் ஏராளம். மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. ஆனால், கல்வி, தொழில்வளர்ச்சி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சியைச் சீர்குலைக்க வேண்டும், மக்களைப் பிளவுபடுத்தி, மதவாத, சாதியவாத வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று ஒருபுறம் பாசிச சக்திகள் காத்திருக்கிறார்கள்.

இன்னொருபுறம், தி.மு.க எதிர்ப்பை மட்டுமே முதன்மை இலக்காகக் கொண்டு கழகத்தின் மீதும் திராவிட இயக்க முன்னோடிகள் மீதும் திராவிட மாடல் ஆட்சியின் மீதும், அவதூறுகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்புவதன் மூலம் தி.மு.கவை வீழ்த்த முடியும், என்று நினைக்கும் கயவர்களும் காத்திருக்கிறார்கள். நமக்கோ 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது. தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் கழகத்தலைவர் அவர்களின் தலைமையில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழர்கள் வளம் பெற்று தமிழ்நாடு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். இத்தகைய மாபெரும் கடமையை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு கழக இளைஞர் அணிக்கு இருக்கிறது. சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை, மீண்டும் 2026-இல் அமைக்க இளைஞர் அணியின் 45-ஆம் ஆண்டு விழாவில் உறுதியேற்போம். நன்றி, வணக்கம்.

banner

Related Stories

Related Stories