தமிழ்நாடு

3 குற்றவியல் சட்டங்கள் : திமுக தொடர்ந்த வழக்கு - பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு !

3 குற்றவியல் சட்டங்கள் : திமுக தொடர்ந்த வழக்கு - பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ, இந்தி திணிப்பு போன்றவைகளை செய்து வருகிறது. குறிப்பாக பிராந்திய மொழிகளை அழித்து, இந்தியை நாட்டின் மொழியாக அறிவிக்க துடிப்பு காட்டி வருகிறது. தேசிய மொழியாக எந்த மொழியும் தற்போது வரை இந்திய அரசு அறிவிக்கப்படாத நிலையில், இந்தியை அதில் இடம்பெற செய்ய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் தொடங்கிய இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், மேற்கு வங்கம் போன்ற நாட்டின் பல்வேறு இடங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளது. எனினும் பாஜக இப்போதும் இந்தி திணிப்பை விடுவது போல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கு பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் குறித்து பேச மறுத்த பாஜகவை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான் வாய்ப்பு என்று எண்ணிய பாஜக, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி-க்களையும் சஸ்பெண்ட் செய்தது.

3 குற்றவியல் சட்டங்கள் : திமுக தொடர்ந்த வழக்கு - பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு !

பின்னர் IPC, CrPC, Indian Evidence ஆகிய 3 சட்டங்களையும் திருத்தம் செய்து, அதன் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதீய சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் என்று ஹிந்தியில் மாற்றியது பாஜக. இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமானது கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதற்கு எதிராக பல்வேறு சட்டத்துறை சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக பலரும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். அந்த வகையில் இந்த சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, அவற்றை ரத்து செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் நாடாளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெறாமல், சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருதமயமாக்கி உள்ளதாகவும், இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 குற்றவியல் சட்டங்கள் : திமுக தொடர்ந்த வழக்கு - பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு !

பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குற்றமாக்கியுள்ளதாகவும், குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரித்துள்ளதாகவும், ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் குடியரசு தலைவர், ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தில், காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் நடைபெற்றது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிட்டார்.

மேலும் வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் ஆஜராகி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும், சிபிசி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி, 4 வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories