சென்னையில் தெருநாய்களால் பொதுமக்களுக்கு அசவுரியங்களும், தொல்லைகளும் இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, நாய்கள் கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
முன்னதாக 2018ம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் 59 ஆயிரம் தெருநாய்கள் இருந்தன. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பின் கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்கிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரை நடக்கும் கணக்கெடுக்கும் பணியை, 20 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
நாய்களின் இனம் தன்மை அவற்றின் தன்மை தடுப்பூசி செலுத்தியவையா கருவுற்றவையா நோய் தொற்று கொண்டவையா என இவற்றையெல்லாம் கண்டறியப்பட்டு wvs என்ற செயலியில் பதிவிட்டு நாய்களை கணக்கெடுப்பதன் மூலம் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி வளர்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது.
கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் என ஒரு குழுவிற்கு 2 பேர் வீதம் 36 குழுக்கள் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வற்கான வழிமுறைகள் குறித்து ஏற்கனவே கணக்கெடுப்பில் ஈடுபடும் குழுவினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இதன் விவரங்களை மாநகராட்சி வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.