சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை காவல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பகுஜன் சமஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு பின்னணி தொடர்பாக செய்தியாளர்கள் சந்தித்தார்
அப்போது பேசிய அவர், "நேற்று மாலை 7.15 மணிக்கு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் முன்பு கத்தியால் தாக்கப்பட்டார். தகவல் அறிந்த அருகாமையில் இருந்த போலிஸார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் அளித்த புகாரில் செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வியை ஆய்வு செய்யப்பட்டு, 3 மணி நேரத்தில் காவல் துறையினரால் 8 நபர்கள் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டு எட்டு நபர்கள் மட்டுமல்லாது மேலும் குற்றத்துடன் சம்பந்தம் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் உடன் காயம் அடைந்த நபர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில் இறுதி சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் காவல்துறை பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் எந்த வாகனத்தில் வந்தார்கள், எம்மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிந்த பிறகு உரிய தகவல்கள் வெளியிடப்படும்.
சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை கிடைக்கும். அதற்கான வகையில் வழக்கு செல்கிறது. அரசியலில் சில சமயங்களில் பிரச்ச்னை அவருக்கு இருந்தது . ஆனால் இந்த சம்பவம் அரசியல் ரீதியான பிரச்சனைகள் நடைபெற்று இருக்க வாய்ப்பு குறைவு. இன்னும் பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக மேலும் சில குற்றவாளிகளை பிடித்து விசாரிக்கவேண்டியுள்ளது. விசாரணையின் முடிவில் தான் காரணம் தெரியும்.நேரடியாக ஆம்ஸ்ட்ராங் கிற்கு மிரட்டல் இருந்ததாக நமக்கு தகவல் இல்லை. அவர் அரசியலில் உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கியை தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின் அவர் மீண்டும் பெற்றுள்ளார். அவருடைய கை துப்பாக்கி அவரிடம் தான் உள்ளது. அவரின் இறுதி சடங்கு செய்யும் இடம் குறித்து இப்போது தகவல் இல்லை.முக்கியமான பகுதிகளில் போக்குவரத்து சீராக உள்ளது. காலை முதல் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இராஜீவ் காந்தி மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணிக்கு அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் செல்லும் வழியில் முக்கிய இடங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை பிடிப்பட்டவர்களில் தென்மாவட்ட குற்றவாளிகள் இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் பாலு வேலூர் மாவட்டம், மணிவண்ணன் திருவள்ளுர், திருமலை பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என ஆய்வில் சொல்லியுள்ளார்கள். கடந்த காலங்களை ஒப்பிடும் போது கடந்த 6 மாதங்களில் கொலை குற்றங்கள் சென்னையில் குறைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். எந்த குற்றம் நடைபெற்றாலும் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது"என்று கூறியுள்ளார்.