சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலைக்கு நெருக்கமானர் தொடர்பில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
"கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய அரசில் பா.ஜ.க. இருப்பதால் தமிழக பா.ஜ.க.வில் சமூக விரோத சக்திகளுக்கு அதிகளவில் புகலிடம் அளித்திருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் 167 கோடி ரூபாய் மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் யூடியூபர் மற்றும் பா.ஜ.க. பிரமுகர் உட்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தப்படும் செயல்கள் மிக அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் விற்பனை செய்யும் கடையை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சபீர்அலி மற்றும் பிரித்வி ஆகியோர் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக நடத்தி வருகின்றனர். பல லட்ச ரூபாய் முதலீடு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியை பா.ஜ.க.வின் தொடர்பின் காரணமாக பெற்று அதில் 7 பேரை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுமதியுடன் பி.சி.ஏ.எஸ். பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் டிரான்சிட் பயணிகள் சிலர், கடத்திக் கொண்டு வரும் தங்கத்தை விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்து விட்டு, சபீர்அலிக்கு தகவல் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். அப்போது சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி அந்த தங்கத்தை ஊழியர்களின் உள்ளாடைக்குள் அல்லது உடலின் பின் பகுதிக்குள் மறைத்து வைத்து வெளியில் கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். இவ்வாறாக கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடத்தல் தொழில் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விமான நிலைய தங்க கடத்தலில் சம்மந்தப்பட்ட சபீர் அலி மற்றும் தமிழக பா.ஜ.க.வில் மாணவர் அணியில் பதவி வகித்து வரும் பிரித்வி ஆகியோர் பா.ஜ.க. தலைவர்கள், பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா, அண்ணாமலை ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் நாளேடுகளில் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் ஊழலை ஒழிக்க புறப்பட்ட அவதார புருஷராக தம்மை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அண்ணாமலை ரூபாய் 167 கோடி தங்க கடத்தலுக்கு துணை போயிருப்பதற்கு என்ன பதில் கூறப் போகிறார் ? இத்தகைய சமூக விரோத கள்ளக் கடத்தல் பேர்வழிகளின் மூலமாக பெற்ற நிதி ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் தமிழக பா.ஜ.க., பல்வேறு நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகிறது.
சமீபத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழகத்தில் பேசிய ஒரே கட்சி தமிழக பா.ஜ.க., ஒரே தலைவர் அண்ணாமலை. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிற நீட் தேர்வை திணித்ததை எதிர்த்து தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் எதிர்த்து போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில் நீட் தேர்வை பகிரங்கமாக அண்ணாமலை ஆதரித்து பேசுவதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இத்தகைய ஆதரவு நிலை எடுத்ததற்கு காரணம், கொங்கு மண்டலத்தில் நீட் பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள் நீட் தேர்வு தொடருவதன் காரணமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இவர்கள் வருமானம் பெருகுவதற்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகிற அண்ணாமலை மேற்கொண்ட பாத யாத்திரைக்கு பெரும் நிதியை வழங்கியிருப்பதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கிற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து, சீரழிக்கும் நீட் தேர்வை 139 ஆண்டுகால வரலாற்றை பெற்றுள்ள இந்திய தேசிய காங்கிரசும், சமீபத்தில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகமும் எதிர்க்கிறது என்று சொன்னால் அது தமிழகத்திற்கு விரோதமானது என்பது தான் காரணம். அதனால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று கோருகிறோம். ஆனால், நீட் தேர்வை ஆதரிப்பதன் மூலம் பா.ஜ.க.வின் நிதி ஆதாரத்தை பெருக்குகிற நோக்கத்தில் அண்ணாமலை பேசுவது இன்றைக்கு அம்பலமாகியுள்ளது.
இத்தகைய ஆதாயத்தின் அடிப்படையில் தான் தமிழகத்திற்கு விரோதமாக நீட் தேர்வை அண்ணாமலை பகிரங்கமாக அதரித்து பேசி வருகிறார். இதன்மூலம் தமிழர்களின் விரோதியாகவும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் சதிச் செயலுக்கு துணை போகிற அண்ணாமலையை தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை எந்த காலத்திலும் காலூன்ற முடியாத அளவிற்கு தமிழக மக்கள் புறக்கணித்து ஒதுக்கி வைப்பது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."