பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள் தொடங்கிய தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாக பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.
அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். எனினும் ஜெகநாதனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதுணையாக இருந்து வருகிறார். மேலும் , அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கவும் ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீண்டும் பதவி வகிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் மீது குற்றச்சாட்டுள்ளது என அந்த குழுவே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.
மேலும், உயர்கல்வித்துறை சார்பாக நீதிமன்றத்தில் நாடி உள்ளதாக கூறிய அவர், அவர் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளதாகவும்,அதற்கு முன்பாகவே அவர் மீது வழக்கு இருக்கும் போதே தமிழ்நாடு ஆளுநர் சேலம் பல்கலைக்கழகத்திற்கு சென்று அந்த துணைவேந்தருடன் உரையாடி உள்ளதாகவும், அது அணைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
அங்கு தவறு நடந்து உள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக அரசு இதில் கவனமாக செயல்பட்டு வருவதாகவும், அவர் மீண்டும் துணைவேந்தராக நியமிக்கப்படாமல் இருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.