தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த எடுப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கினார்.
அதில், ”நகர்புற உள்ளாட்சிகளில், தெருநாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த, பிராணிகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் நாய் இனக்கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
சென்னையில் இப்பணிக்காக 78 பயிற்சி பெற்ற பணியாளர்களும்,16 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு. தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசியும், நாய் இனக்கட்டுப்பாடு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு, 3 முதல் 5 நாட்களுக்கு பராமரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகின்றன.
ரூ.20 கோடி மதிப்பீட்டில் மூன்று நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் புதுப்பிக்கப்பட்டும் நடப்பு ஆண்டில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 2 புதிய நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் கட்டவும், 7 புதிய நாய் பிடிக்கும் வாகனங்கள் மற்றும் 3 தடுப்பூசி அளிக்கும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவும் உள்ளது.
தற்போது உள்ள மத்திய அரசின் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகளின்படி, தெரு நாய்களை ஒரு தெருவில் ஒரு இடத்தில் பிடித்து அறுவை செய்யும் இடத்திற்கு கொண்டு சென்று, தகுந்த உணவளித்து அறுவை சிகிச்சை செய்து, சிகிச்சைக்கு பின் நான்கு நாட்கள் பராமரித்து, பின்னர் பிடித்த அதே தெருவில் அதே இடத்தில் விட வேண்டும். தவறினால் நகர்புற உள்ளாட்சி அலுவலர்கள் தண்டிக்கப்பட சட்டத்தில் வழிவகை உள்ளது. அதேபோல் தெரு நாய்களுக்கு உணவு வழங்குபவர்கள் மற்றும் தன்னார்வலர்களை தடுத்தாலும் குற்றமே. இவை அனைத்துக்கும் உட்பட்டே தெரு நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கு 5473 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவற்றை வளர்க்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தெரு நாய்களை கணக்கெடுக்கவும் கருத்தடை சிகிச்சை முறையினை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.