முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, "உயரட்டும் திராவிடர் வேதம், ஒலிக்கட்டும் உதயகீதம்" எனும் தலைப்பில் 20 ஆட்டோ ஓட்டுனருக்கு ஆட்டோ வழங்குதல் மற்றும் 1000 கல்லூரி மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார். பின்னர் பேசிய அவர், இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த மாநிலம் தமிழ்நாடு. பெண்களும் உயர் கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக புதுமை பெண் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவர்களின் பசியை போக்கியுள்ளது. இப்படி கல்விக்காக பல முக்கிய திட்டங்களை நமது முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 28 லட்சம் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்று முதலில் சொன்ன கட்சி தி.மு.கதான். இன்று இந்தியாவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார்.