நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் மதவாத சக்திகளை மக்கள் வீழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மடலில், ”நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பா.ஜ.க.வின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாக இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.
சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.