தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தேசிய அரசியலிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை முதலமைச்சாராக இருந்து நவீன தமிழ்நாடை உருவாக்கியதில் அதன் சிற்பியாக விளங்கியவர். இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் 3 தொகுப்புகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ’கலைஞர் நூற்றாண்டு நினைவலைகள்’ புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.பின்னர் முரசொலி அலுவலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலரை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.