2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். இந்த இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவில் முதலீடு மற்றும் சுமார் 30 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க கூகுளின் ஆல்பபெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திக்கான ஐபோன்களை ஃபாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை தமிழ்நாட்டில் தயாரித்து வருகின்றன. தற்போது கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு ஆலையும் தமிழ்நாட்டில் அமைய உள்ளது. நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 7 லட்சம் கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.
இதன்மூலம், 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. எளிய தொழில் கொள்கைகள், வளமான தொழிலாளர்கள் ஆகியவைகளால், மின்சார வாகன உற்பத்தி நிறுவமான வின்ஃபாஸ்ட், டாடா பவர்ஸ், ஆப்பிள் போன்ற முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.