வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் கிளி என்கிற சதீஷ் (34). இவர் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் பள்ளிகொண்டா அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜய் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவர் கிளி என்கிற சதீஷை கைது செய்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது.
இதே போல காட்பாடி அடுத்த வெள்ளக்கல் மேடு பகுதியில் காங்கேயநல்லூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை வழிமறித்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பதும் இவர் பாரதிய ஜனதா கட்சியில் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆக இருப்பதும், மற்றோருவர் அதே பகுதியை சேர்ந்த நவீன் என்றும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட பொறுப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காட்பாடி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பாஜக பிரமுகர்கள் கைதானது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.