உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தான் குடும்ப வன்முறை.
கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருளால் தாக்குவது போன்றவை இதில் அடங்கும். இது, கணவனால் மட்டுமே பெண்களுக்கு வன்முறை நடப்பது என்றில்லை. மற்ற உறவினர்களாலும் நடக்கலாம்.
இது போன்ற வன்முறைகள் நடக்கும் பொழுது பல பெண்கள் தங்களது குடும்பத்திற்கு கெட்ட பெயர் வந்துவிடும், உற்றார் உறவினர்கள் நம்மைப் பற்றி ஏதேனும் பேசி விடுவார்கள் என்று பயந்து இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் தயங்கி அந்த குற்றத்தை மறைத்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் தான் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பெண்களுக்கு ஏதேனும் வன்முறை நடந்தால் உடனடியாக அவர்கள் இலவச டோல் ஃப்ரீ எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி சொல்லலாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால்,
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம். புகாரளித்து உடனடி தீர்வினை பெற்றிடுங்கள். குடும்ப வன்முறையை அறவே ஒழிப்போம், பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 181 | 1091 | 100 என்ற எண்களை தயங்காமல் அழைத்து, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது சென்னை பெருநகர காவல்துறை.
இன்றே குடும்ப வன்முறைக்கு முடிவு கட்டுவோம்!