பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே பூட்டர் பவுண்டேஷன் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாளர்களான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, துணை பேராசிரியர்கள் நரேஷ் குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் நிலையம் வரவழைத்து காவல் உதவி ஆணையர் நிலவழகன் அண்மையில் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள பல்கலைகழக பதிவாளர் தங்கவேலுவும் சம்மந்தப்பட்டது உறுதியானது.
இந்த சூழலில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பல்கலைக்கழக பதிவாளராக செயல்பட்டு வந்த தங்கவேல் பணியில் இருந்துகொண்டே அப்டெக்கான் ஃபோரம் என்ற தனியார் நிறுவனத்திலும் இயக்குநராக இருந்துள்ளது அம்பலமானது.
விதிப்படி அரசு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் மற்றொரு ஆதாயம் தரும் பதவியில் இருக்ககூடாது என சட்டம் உள்ள நிலையில், அதனை மீறி தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது விதிமீறலாகும். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்திட தமிழ்நாடு அரசின் முதன்மை செயலர் பரிந்துரைத்தார். ஆனால், அவரை பணிகீக்கம் செய்ய மறுத்த பல்கலைக்கழக துணை வேந்தர், அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்தார். இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து பதிவாளர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், துணை வேந்தர் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதாவது, தங்கவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் பஞ்ச படியுடன் சேர்ந்து ஓய்வு ஊதியம் வழங்கிட பல்கலை கழக துணை வேந்தர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை வேந்தரின் நடவடிக்கையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட பெரியார் பல்கலை கழக பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதாக உயர்கல்வி துறை செயலாளர் கடிதம் எழுதி பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்க பட்ட முன்னாள் பதிவாளருக்கு அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்கிட ஆணை பிறப்பித்த துணை வேந்தர் மற்றும் பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி ஆகியோருக்கு பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.