அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தலங்களை புதுப்பிக்க மற்றும் சீரமைக்க தமிழக அரசு வழிமுறைகளை எளிமை ஆக்கியுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
"தமிழ்நாட்டில் தனியார் நிலங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து மதங்களை சேர்ந்த வழிபாட்டு தலங்களை செப்பனிடுவதற்கும், சீரமைப்பதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்து வந்தது. இந்த அனுமதி பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்ததால் பணிகள் தடை பட்டு வந்தது. இது குறித்து அரசுக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களிடம் இந்த சட்டத்தை இலகுவாக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் தமிழக அரசிடம் இது குறித்து முறையிட்டார். பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழக அரசு இந்த சட்டத்தை எளிமை படுத்தியுள்ளது. புதியதாக வழிபாட்டு தலம் கட்டுவதற்கு மட்டுமே மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் தேவை.
ஏற்கனவே இயங்கி வரும் வழிபாட்டு தளங்களை சீரமைக்கவும், செப்பனிடவும், பழுது பார்ப்பதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றிதழ் பெற தேவை இல்லை எனவும், புதுப்பிக்கப்படும் கட்டிடத்தின் வரைபட அனுமதியை மட்டும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற வேண்டும் எனவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
வழிபாட்டு தளங்களின் சீரமைப்பை எளிமை ஆக்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி கண்ட சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும் பொது மக்கள் சார்பாகவும், வழிபாட்டு தளங்களின் நிர்வாக குழு சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."