தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்களில் 12,616 பள்ளிகளில் நடைபெற்றது. 9.10 லட்சம் மாணவர்களும், 28,827 தனி தேர்வர்களும், 235 சிறை கைதிகளும் என மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் (91.55% ) தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 (94.53%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.96% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் 4105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 1364 % தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ்பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 415 மாணவர்களும், கணிதத்தில் 20691 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 5104 மாணவர்களும், சமூக அறிவியலில் 4428 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
அதேபோல் அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.02% தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டம் 96.36% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 82.07% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தேர்வெழுதிய 260 சிறைவாசிகளில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.