தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 7,19,196 (94.56%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் சாதிய வன்கொடுமைக்கு உள்ளான நாங்குநேரி மாணவர் +2 தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னதுரை (17) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இரவு 3 பேர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டினர். பின்னர் போலிஸார் விசாரணையில் இது சாதிய வன்கொடுமையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில், 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார். சின்னதுரையின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டது.
மேலும் மாணவன் மீண்டும் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசும், பள்ளிக் கல்வித்துறையும் எடுத்துவந்தது. பின்னர் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த பிறகு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்.
இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில், மாணவர் சின்னதுரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
தமிழ் - 71
ஆங்கிலம் - 93
பொருளாதாரம் - 42
வணிகவியல் - 84
கணக்குப்பதிவியல் - 85
கணிப்பொறி பயன்பாடு - 94
மொத்தம்- 469
தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்துப் பேசிய மாணவர் சின்னதுரை, "சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த போது காலாண்டுத் தேர்வை மருத்துவமனையிலிருந்தே எழுதினேன். எனக்கு 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள், எனது குடும்பத்தினர் அளித்த ஊக்கம் மற்றும் உதவி செய்ததால் இந்த மதிப்பெண்களை எடுக்க முடிந்தது. அடுத்ததாக பி.காம் படித்து சி.ஏ படிக்க வேண்டும் இதுவே தனது லட்சியம். நாட்டில் சாதிய வன்கொடுமை என்பது இருக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.