தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, "தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல் முறையாக வாக்களிப்போர் 10.92 லட்சம். நாளை பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்க 68,321 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 874 ஆண் வேட்பாளர்கள். 76 பெண் வேட்பாளர்கள். வாக்கு பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு வரை வரிசையில் நிற்கும் அனைவரும் டோக்கன் வழங்கப்படு வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
கடந்த மக்களவைத் தேர்தல்களில் 72.47% வாக்குகள் பதிவானது. 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 73.02%, 2014 ஆம் ஆண்டு 73.74% வாக்குகள் பதிவாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வரச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் சக்கர நாற்காலி குறைந்தபட்சம் ஒன்று இருக்கும் . உதவிக்குத் தன்னார்வலர்கள் இருப்பார்கள்.
அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் வாக்குச் சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் நேரடியாகச் சென்று வாக்களிக்கும் வகையில் முன்னுரிமை தரப்படும்.வாக்காளர்கள் உள்ளிட்ட யாரும் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.