மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு புரசைவாக்கத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “தமிழகத்தின் வெள்ளப் பேரிடர் துயர் துடைக்க மாநில தி.மு.க அரசு 37ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டபோது, ஒற்றை பைசா கொடுக்க மறுத்துவிட்டது மோடி அரசு. கேரள அரசு கேட்ட கோரிக்கைக்கும் அதேதான் பதில். கூட்டாட்சி தத்துவத்தைக் கீழே போட்டு மிதிக்கிறது பா.ஜ.க அரசு. மாநில மக்களுக்கு எந்த உதவியும் செய்ய மனமில்லாத மோடி தமிழகத்திற்கு 8 முறை பயணம் வந்துவிட்டுப் போயிருக்கிறார்.
இங்கிருந்து நேரே ராஜஸ்தான் போய், ஊழலை ஒழித்துக் கட்டுவேன், ஊழல்வாதிகளைப் பிடித்துச் சிறையில் போடுவேன் என்று சூளுரைக்கிறார். சுதந்திர இந்தியாவில் இதுவரை கண்டிராத அளவு மிகப்பெரும் ஊழல் ஆட்சி இதுதான். ஊழலைப் பற்றிப் பேசும் அருகதை அற்றது மோடி அரசு.
முதல் நாள் வரை ஊழல் பட்டம் சூட்டப்பட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் பாஜக பக்கம் தாவிவிட்டால் அடுத்த நொடியே உத்தம புத்திரர்களாக மாறி விடும் கேடுகெட்ட மாயாஜாலத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டது பாஜக. வருவாய்த் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட எல்லா சுயேச்சையான அமைப்புகளையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தி நிறுவனங்களை அரட்டி மிரட்டி தேர்தல் பத்திரங்களை வாங்கித் தங்களுக்கு வழங்க வைத்திருக்கிறது பாஜக.
மொத்தப் பத்திர மதிப்பில், பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாஜக அடித்திருக்கிறது. கொஞ்சமும் லாபம் ஈட்டாத அல்லது நஷ்டத்தில் ஓடும் கம்பெனிகள் எல்லாம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு பத்திரங்கள் வாங்கி பாஜகவுக்கு வழங்கி இருக்கும் பணம் எப்படி வந்தது, யார் கொடுத்தது, அந்நிய நாடுகளில் இருந்தா?.
எப்படியெல்லாமோ கொள்ளை அடித்த பணத்தை பாஜகவுக்கு ஏன் கொடுக்கின்றனர் எனில், பதிலுக்கு காண்டிராக்டுகளைப் பெற்றுக் கொண்டனர் என்பதையும் சுட்டிக்காட்டிய யெச்சூரி, கார்பொரேட் - மதவெறி கூட்டு இந்தத் தேச சொத்துக்களை எல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறது.
மதவாதத்தால் மக்களைப் பிரிக்கும் மோசமான அரசியலுக்குத் தமிழக மக்கள் கடந்த தேர்தலைப் போலவே இப்போதும் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் பெருவெற்றி பெற வேண்டும். தொடர்ச்சியாக பா.ஜ.கவோடு கூட்டணி வைத்திருந்த அதிமுகவையும் பா.ஜ.கவையும் சேர்த்துத் தோற்கடிக்க வேண்டும். எந்த விதத்திலும் பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாதபடி ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டி தமிழகம் மற்றும் புதுவை 40 தொகுதிகளிலும் முழு மொத்தமாக பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.