நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கார்த்தி ப. சிதம்பரம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இளையான்குடி ஒன்றியம் தாய மங்கலத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் எம்.பி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ப. சிதம்பரம், "நடைபெற உள்ள தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க .விற்கும் தான் போட்டி உள்ளது. அ.தி.மு.க இத்தேர்தலில் போட்டியிடுகிறது. அந்தகட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறப்போவதில்லை. தப்பி தவறி ஒரு எம்.பி. வெற்றி பெற்றால் அவர் யாரை ஆதரிப்பார். அவ்வாறு வெற்றி பெறும் அ.தி.மு.க. எம்.பி. நாடாளுமன்றத்தில் கடைசியாக உட்கார வேண்டும். அவர் பேச நேரம் ஒதுக்க அங்குசிரமப்பட வேண்டும். எனவே இத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதை தவிர்த்திருக்க வேண்டும். எனவே அ.தி.மு.க போட்டியிடுவது தேவையற்றது.
மூன்றாவது முறையாக பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. பத்தாண்டு காலம் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. எத்தகைய தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை. மாறாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் நசுக்கப்பட்டது. ஜனநாயகக் குரல்வளை நெரிக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. இத்தகைய நிலையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேர்தல் என்பதே இருக்காது. இதுதான் கடைசி தேர்தலாக அமையும்.
பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக அளவில் வஞ்சனைகள் செய்துள்ளார்கள் .கடந்த 2014 ஆம் ஆண்டுவரை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காளையார் கோவிலில் தேசிய பஞ்சாலை புனரமைக்க ரூபாய் 63 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. புதிய எந்திரங்கள் வாங்கி அதில் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைக்கு சேர்ந்து வாழ்வு பயன்பெறுவதற்காக அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு என்று ஏதாவது குறிப்பிடப்படும் திட்டங்களை பிரதமர் மோடியோ பா.ஜ.க.வோ செய்திடவில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட புயலின் போதும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் எத்தகைய உதவினையும் பிரதமர் மோடி செய்திடவில்லை.நிதி உதவி கேட்டு தமிழக முதல்வர் பிரதமரை மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அறிக்கை தந்தார்கள். இன்று ஏப்ரல் மாதம் இன்றைய தேதி வரை தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிவாரணம் தரவில்லை.
பிரதமர் மோடிக்கு தமிழகம் வரும் பொழுது இட்லி பிடிக்கும் தமிழ் மொழி பிடிக்கும் என்று கூறுகிறார். அவருக்கு இட்லியும் பிடிக்கட்டும்.. தமிழையும் பிடிக்கட்டும். ஆனால் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடியை பிடிக்கவில்லை. அதை நடைபெற உள்ள தேர்தலில் நாம் நிரூபித்திட வேண்டும்.
பத்து ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரே பிரதமர் மோடி அவர்கள் தான். இந்தியா பன்முகத்தன்மை உள்ள நாடாகும். இதில் ஒரே நாடுஒரே மதம் ஒரே தேர்தல் என்ற கோஷம் எடுபடாது.
பா.ஜ.க ஆட்சி என்பது கார்பரேட் நிறுவனத்திற்கான ஆட்சியாக அமைந்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் ரூபாய் 8500 கோடிகளை லஞ்சமாக பெற்றுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி பாக்கி என்று நோட்டீஸ் அனுப்புகிறார்கள் .அரசியல் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு வருமானவரி கட்ட தேவையில்லை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 11 கோடி ரூபாய் வரி பாக்கி என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள் . இது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்.
இன்று புதிதாக மோடி வாஷிங் மெஷின் ஓன்று உள்ளது. அதில் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் எத்தகைய ஊழல் செய்தாலும் பா.ஜ.க.வில் சேர்ந்ததும் மோடி சோப்முலம் அவர்களை உத்தமர்களாக்கி விடுவார்கள். ஜனநாயகம் கேலிக்கூத்தாக ஆக்கப்படுகின்றது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானதாகும்.
இத்தகைய கேலிக்கூத்துகளுக்கு வருகிற 19-ம் தேதி முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக அமைய வேண்டும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று நாடு முழுவதும் பேசப்படும் பொருளாக உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறியவைகள் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். மக்களின் பாராட்டினை பெற்று வருகிறார் .இந்த திட்டம் இந்தியா முழுவதுமாக தொடர்ந்திடவும் இரண்டு ஆண்டுகள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தொடரவும் நாம் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் .நாம் அனைவரும் ஒரே குரலாக ஒருமித்த குரலாக இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.