தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனிடையே இன்று காலை சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 3 பேரிடம் ரூ.4 கோடி ரொக்கப் பணமும், அவர்கள் மூவரும் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனுவை வழங்கினார். இது குறித்து அவர் வழங்கிய புகார் மனுவில்,"திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக, அவரின் உதவியாளர் சதீஷ் மற்றும் 2 பேர் 4.5 கோடி பணத்தைக் கொண்டு சென்றிருக்கின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டைமண்ட் ஹோட்டலில் சோதனை செய்துள்ளனர். இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பல கோடி பணத்தை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். நயினார் நாகேந்திரன் பெரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதேபோல், பாஜக அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.
எனவே, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி நயினார் நாகேந்திரன் மற்றும் அவரின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், பல லட்சம் மதிப்புடைய கணக்கில் வராத பணமும், பரிசுப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் நெல்லை மாநகர திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.