தமிழ்நாடு

கச்சத்தீவு நமது அரசுரிமை,அதை இலங்கைக்கு கொடுக்க தமிழ்நாடு சம்மதிக்காது- கலைஞரின் போராட்டங்களின் தொகுப்பு!

கச்சத்தீவு நமது அரசுரிமை,அதை இலங்கைக்கு கொடுக்க தமிழ்நாடு சம்மதிக்காது- கலைஞரின் போராட்டங்களின் தொகுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

* முதலமைச்சர் கலைஞர் அவர்கள், கச்சத்தீவை தாரை வார்க்கவில்லை. ஏனென்றால் அவர் எந்தக் காலத்திலும் இந்திய நாட்டின் பிரதமராக இருந்தது இல்லை.பிரதமராக இருந்திருந்தால் மட்டும் தான் அதனைச் செய்திருக்க முடியும். இந்த அடிப்படை அறிவு கூட அவர்களுக்கு இல்லை.

*இந்தியப் பிரதமராக இந்திரா காந்தியும்- இலங்கை பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயகாவும் சேர்ந்து 1974 ஜூன் 26 ஆம் நாள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. பிரதமர் இந்திரா காந்தியை, திமுக ஆதரித்த காலமும் அல்ல அது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் திமுக ஆட்சியைக் கலைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க!

* ஒரு ஒப்பந்தம் என்றால் சட்டத் திருத்தமோ, அல்லது ஒரு சட்டமோ நிறைவேற்றி இருக்க வேண்டும். அப்படி எதுவும் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அப்படிக் கொண்டு வரப்பட்டு இருந்து - அதனைத் திமுக ஆதரித்ததும் இல்லை.

* 1971 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கை அரசு சொந்தம் கொண்டாடியதுமே - அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி அவர்களுக்கு உத்தரவிட்டார். கச்சத்தீவானது இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்கள்.

* இதனை மீறித்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. தெற்காசியாவில் தன்னை பலம் பொருந்திய நாடாக காட்டிக் கொள்ள அண்டை நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொள்ள பிரதமர் இந்திரா அன்று நினைத்தார். ( இலங்கை கேட்கும் போதெல்லாம் இன்று பிரதமர் மோடி கோடிக்கணக்கில் கடன் உதவி செய்வதைப் போல!) இலங்கை சென்ற பிரதமர் இந்திரா, கச்சத்தீவை இலங்கைக்கு தரப் போகிறோம், அது வெறும் பாறை தான் என்று சொன்னார்.

* இந்தியா திரும்பிய பிரதமர் இந்திராவை, டெல்லி சென்று முதல்வர் கலைஞர் சந்தித்தார்கள். 'கச்சத்தீவை வெறும் பாறை என்று நீங்கள் சொன்னது தமிழர்களின் மனதைப் புண்படுத்தக் கூடியது ஆகும்' என்று முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று பிரதமர் விளக்கமளித்தார்.

* கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என்று பிரதமர் இந்திராவுக்கு முதல்வர் கலைஞர் கடிதம் எழுதினார். அதற்கு பிரதமர் அனுப்பிய கடிதத்தில் ( 1973 அக்டோபர் 8), '' கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்ற ஆதாரங்கள் தேடப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளியுறவு துறை செயலாளர் கேவல் சிங், இலங்கை போக இருக்கிறார். அப்போது உங்களையும் வந்து சந்திப்பார்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

* கேவல் சிங், இங்கு வருவது வரை காத்திருக்காமல் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் டெல்லிக்குச் சென்றார். அவரே கேவல் சிங்கை சென்று சந்தித்தார். 'எக்காரணத்தைக் கொண்டும் கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது' என்று வலியுறுத்தினார். அவருடன் சட்ட அமைச்சர் செ.மாதவனும் உடன் சென்றிருந்தார்.

* பின்னர், பிரதமர் இந்திராவையும் முதலமைச்சர் கலைஞர் சந்தித்தார். கச்சத்தீவு இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் பிரதமரிடம் வழங்கினார்.

* சென்னை திரும்பிய முதலமைச்சர் கலைஞர், இந்த ஆதாரங்களை அடுக்கி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

''கச்சத்தீவு பிரச்னை குறித்து வெளியுறவுத்துறை செயலர் கேவல்சிங் என்னுடன் பேசினார். கச்சத்தீவு பற்றிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் பலவிஷயங்கள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்று தெரியவருகிறது. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குப்பகுதிக் கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்குக்கப்பம் கட்டியதுகூட இல்லை. ஆக, கைவசம் இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது, இந்தஆதாரங்களை எடுத்துக்காட்டி, ‘கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல'என்று நிரூபிக்க முடியும்." என்று அதில் குறிப்பிட்டார் முதல்வர் கலைஞர்.

கச்சத்தீவு இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான ஆதாரங்கள் கொண்ட கடிதத்தை பிரதமர் இந்திராவுக்கு அனுப்பிட்டு - மீண்டும் டெல்லி சென்றார் முதல்வர் கலைஞர்.

* ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கை முதலமைச்சர் கலைஞர் சந்தித்துப் பேசினர். '' கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்குத் தமிழக அரசு சம்மதிக்காது' என்று தெளிவுபடுத்தினார் முதல்வர்

'' இதுவிஷயமாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் உங்களைச் சந்தித்துப் பேசுவார்" என்றார் ஸ்வரண் சிங். அதன்படியே வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் முதலமைச்சர் கலைஞரைச் சந்தித்து கச்சத்தீவு குறித்துப் பேசினார்.அப்போதும்கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்துப் பேசிய முதலமைச்சர் கலைஞர், கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றும் அதில் உறுதி மாறாமல் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

* 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயகா டெல்லி வந்தார். அப்போது, பிரதமர் இந்திராவுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் அனுப்பினார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கே உரிமையானது என்பதை நிலைநாட்டக் கோரிக்கை வைத்தார் கலைஞர்.

* வெளியுறவுத் துறை செயலாளர் கேவல் சிங், சென்னை வந்து முதல்வர் கலைஞரைச் சந்தித்தார். அவரிடமும் கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதை கடுமையாக எதிர்த்து முதல்வர் கலைஞர் பேசினார்.

* இவை அனைத்தையும் மீறித்தான் இந்தியப் பிரதமரும், இலங்கைப் பிரதமரும் 1974 ஜூன் 26 ஆம் நாள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார்கள்.

* ''கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்குத் தான் முதல் ஆபத்து " என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அவர்கள் நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார்.

* ''தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததாக அமையாது" என்று நாடாளுமன்றத்தில் அப்துல் சமது எச்சரித்தார்.

* ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாள் - அதாவது ஜூன் 29 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் கூட்டினார்கள். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.

* 1974 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் கலைஞர்.

கச்சத்தீவு நமது அரசுரிமை,அதை இலங்கைக்கு கொடுக்க தமிழ்நாடு சம்மதிக்காது- கலைஞரின் போராட்டங்களின் தொகுப்பு!

'' இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்னையில் மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு -

மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது" - என்பதே கலைஞரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஆகும்.

* ''தமிழ் மக்களின் உணர்வை மதித்திடுங்கள் என்றோம். இந்தியாவுக்கே சொந்தமென்பதற்கான ஆதாரங்கள் தேடப்படுகின்றன என்றார்கள். நமக்கே சொந்தமென்பதை மெய்ப்பிக்கும் ஆதாரங்களைத் திரட்டி அனுப்பிவைத்தோம். வலியுறுத்தினோம். விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் வன்மையாகப் பேசி நம்ப வைத்தார்கள். ஆனால் கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள், பதைத்தோம், துடித்தோம்" என்று முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார்கள்.

* ''மாநிலம் விட்டு மாநிலம் ஒரு பகுதியை மாற்றுவதற்கு சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவையாம். ஆனால் ஒரு மாநிலத்தின் பகுதியை மாற்றாருக்கு தானம் தர மட்டும் சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவையில்லையாம்" என்று சட்டமேலவையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் பேசினார்கள். சட்டமன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் எப்படி இந்த ஒப்பந்தம் நிறைவேற்றலாம் என்பதே அவரது கேள்வியாகும்.

* ஒப்பந்த நகலானது நாடாளுமன்றத்தில் ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கடுமையாக எதிர்த்துப் பேசினார் திமுக உறுப்பினர் இரா.செழியன். 'இது கீழ்த்தரமான ஒப்பந்தம்' என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

* அமைச்சர் ஸ்வரன்சிங் அவர்களிடம், தமிழக அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததா என்று கேட்கப்பட்டபோது, அவரால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. 'தமிழக அரசிடம் பேசினோம்' என்று மட்டுமே சொன்னார்.

* ''கச்சத்தீவு விவகாரம் குறித்து எங்களிடம் கருத்துக் கேட்டு கடிதம் எழுதினார்களே தவிர, இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நானே வலியச் சென்று தான் பேசினேன்'' என்று முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

* கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிரான கண்டனக் கூட்டங்களை திமுக நடத்தியது. ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இக்கூட்டங்களை நடத்துவதாக கழகம் அறிவித்தது.

* தஞ்சையில் கலைஞரும், சென்னையில் பேராசிரியரும் கண்டன உரையாற்றினார்கள். அப்போது ஶ்ரீபெரும்புதூர் நகரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியவர் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

இன்றைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அன்றைய தினம் விருத்தாசலத்தில் பேசினார்.

* 'தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அழிவு தரும் இடமாக கச்சத்தீவு மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம்" என்று பேராசிரியர் அன்பழகனார் பேசினார்.

* இது அண்டை நாட்டு விவகாரம் - இதில் மாநில அரசு தலையிடுவதற்கோ, கருத்துச் சொல்வதற்கோ, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கோ உரிமை இல்லை என்பதே அன்றைய பிரதமர் இந்திராவின் நிலைப்பாடு இருந்தது. அதனை மீறியே தனது சக்தி முழுமையையும் கலைஞர் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

( கச்சத்தீவு குறித்த முழு உண்மைகளையும் விரிவாக ஆர்.முத்துக்குமார் எழுதி நூலாக எழுதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் இந்த தலையங்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன!)

சட்டமன்றம், நாடாளுமன்றம், மக்கள் மன்றம் ஆகிய அனைத்தின் மூலமாகவும் தனது எதிர்ப்பை கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் காட்டினார் என்பது வரலாறு. எனவே, கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று சொல்வதற்கான முழு உரிமையும் திமுகவுக்கே உண்டு.

தாரை வார்க்கப்பட்ட காலத்தில் அதற்கு எதிராக ஶ்ரீபெரும்புதூரில் - 1974 ஆம் ஆண்டே பேசியவர் என்ற அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே முழுத்தகுதி உண்டு.

banner

Related Stories

Related Stories