சென்னை ஜாபர்கான் பேட்டையில் ரூ.24.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு மீன் அங்காடியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கர்நாடகா மாநிலத்தில் கோபி மஞ்சூரியன் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு கெடுதல் ஏற்படுத்தும் உணவு தடை செய்யப்படும். பஞ்சுமிட்டாய் கெடுதல் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அதன்படி தமிழ்நாட்டில் பங்சுமிட்டாய் தடை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் அரசியல் செய்து வருகிறார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் நடமாட்டம் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காவல்துறை அதிகாரி மகேஷ் அகர்வால் தென்னிந்திய டிஜிபி கள் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியபோது, ஆந்திராவில் 4000 ஏக்கர் கஞ்சா செடியை அழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் 6000 கோடி மதிப்புள்ள கஞ்சா செடி அழிக்கப்பட்டது. தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகள் அங்கே சென்று சொன்னதால் இந்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா விளைவது கிடையாது. முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எங்காவது கஞ்சா செடிகள் விளைந்து இருந்தால் ஆளுநர் சுட்டிக் காட்டலாம்" என தெரிவித்துள்ளார்.