போதைப் பொருட்கள் விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெயரை தொடர்புப் படுத்திப் பேசி இருந்தார். அதேபோல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூகவலைதள வீடியோவிலும், முதலமைச்சர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு கருத்து தெரிவித்தாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.
அந்த மனுவில்,"போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாகக் கடந்த 8 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார்.
இதே போல இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சரை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.