தமிழ்நாடு

“போதை மருந்து விற்பனையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய முதலமைச்சர்”: பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி!

போதை மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. போதை மருந்து விற்பனையாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது அரசு.

“போதை மருந்து விற்பனையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய முதலமைச்சர்”: பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

போதைக்கு எதிரான நடவடிக்கைகள்

போதை மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. போதை மருந்து விற்பனையாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது அரசு. மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை எஸ்.பி.க்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர், போதைப் பொருள் தடுப்பு குறித்து தான் அதிக அக்கறையோடு பேசினார்.

« கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாகத் தடுத்தாக வேண்டும்.

« மலையடிவாரங்களைக் கண்காணித்தாக வேண்டும்.

« அண்டை மாநிலங்களில் இருந்து கடத்திவருவதைத் தடுத்தாக வேண்டும்.

« எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும்.

« கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

« காவல் துறையினரின் ரோந்து அதிகரிக்க வேண்டும்.

« அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

« போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் இடங்களை நிரந்தரமாகக் கண்காணிக்க வேண்டும்.

« பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.- – என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

“இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரியைப் போலச் செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன்” என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருந்தார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் தி.மு.க. அரசு பதவி ஏற்றதும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாக இருந்தது.

அதன் அடிப்படையில், அரசால் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா உள்ளிட்டவற்றைப் பதுக்கி வைத்து விநியோகம் செய்பவர்கள், கடைகளில் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள் குறித்து கண்காணித்து, அவ்விடங்களில் திடீர் சோதனைகள் மேற்கொண்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்ச்சியாக இரண்டு வார காலத்திற்கு மாநிலம் முழுவதும் போதைப் பொருள் தொடர்பாக சிறப்பு அதிரடிச் சோதனைகள் நடைபெற்றன. 2022 மார்ச் மாதம் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரிலும், 2022 டிசம்பர் மாதம் ஆபரேஷன் கஞ்சாவேட்டை 3.0 என்ற பெயரிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது மட்டுமின்றி, போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 100 மற்றும் 112 என்ற பொதுவான எண்களைத் தவிர்த்து, 94981 – -11191 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமாகவும், காவல்துறையினருக்கான முகநூல், டிவிட்டர் பக்கங்களிலும் பொதுமக்கள் புகார் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடந்த 2021 மே முதல் டிசம்பர் வரை 26,666 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27,096 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுள் 127 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.37.36 கோடி மதிப்புள்ள 2,63,759 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

2022 ஆம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 30,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32,006 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுள் 121 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ.49.90 கோடி மதிப்புள்ள 3,37,295 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடந்த 01.05.2021 முதல் 31.12.2021 வரை 5,131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,304 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுள் 226 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 14,828.23 கிலோ போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இக்காலக்கட்டத்தில் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட 603 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, கடந்த 01.01.2022 முதல் 31.12.2022 வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 10,391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14,282 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுள் 580 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ.27.14 கோடி மதிப்புள்ள 27,140.026 கிலோ போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இக்காலக்கட்டத்தில் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட 1,474 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் முக்கிய நகரங்களில், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் சரக காவல் துறையினர் அடிக்கடி சோதனைகள் மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்று காவல் துறையினர் கைது செய்தனர். மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து கிடைக்கும் நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில், மாவட்டக் காவல்துறையினர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கைது செய்து வருவதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வழக்கமாக மேற்கொள்ளப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்தும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தும் அவர்கள் மேற்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடா வண்ணம் தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் காவல் நிலைய தொலைபேசி எண், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் ரோந்துக் காவலர்கள் ஆகியோரது தொலைபேசி எண்களை பொதுமக்கள் பார்வைக்குத் தெரியும்படி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றும் சி.சி.டி.வி. கேமிராக்களை அவ்வப்போது பராமரிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றங்களைத் தடுக்க காவலர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் (Body worn Camera) வழங்கப்பட்டுள்ளன. FRS (Face Recognition System) செயலியை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமக் காவலர்கள் திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி, காவல் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் நீதித்துறை நடுவர்கள் அடங்கிய குழு அமைத்து 6 மாதத்திற்கு ஒரு முறை பொதுமக்களை நேரடியாக சந்தித்து, சட்டம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் NDPS சட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின், 5,184 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இப்படி இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது தி.மு.க. ஆட்சி.

banner

Related Stories

Related Stories