சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக மகளிர் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.
திராவிட இயக்கத்தின் அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவர் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், சுயமரியாதைத் திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் சட்டத்தை அவர் நிறைவேற்றினார்.
பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
அதுமட்டுமின்றி, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மகளிர் மறுமண நிதி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், கைம்பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் முதியோர் உதவித் தொகை, 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம், பெண்களே நடத்தும் நியாய விலைக் கடைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாட்டில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு, இந்தியாவிலேயே முதல் முறையாக 1973-இல் காவல்துறையில் மகளிர் நியமனம் என்று கலைஞரின் ஆட்சிக் காலங்களில் மகளிரை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பட்டியல் மிக நீளமானவை.
இவற்றின் நீட்சியாகவும், விரிவாக்கமாகவும் உங்களில் ஒருவனான எனது தலைமையில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியிலும் பெண்களின் சமூக - பொருளாதார விடுதலையை, மேம்பாட்டை உறுதி செய்வதற்கான பல உன்னதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் விடியல் பயணத் திட்டத்திற்காகத்தான் எனது முதல் கையொப்பத்தை இட்டேன். உலகின் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத வகையில், மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம்.
அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 விழுக்காட்டுக்கு உயர்த்தி எல்லா அலுவலகங்களிலும் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை மிஞ்சியும் மகளிர் பணிபுரியும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.
மூவலூர் மூதாட்டி இராமாமிருதம் அம்மையாரின் பெயரால் பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகள் குடும்பத்தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என்ற அக்கறைமிகு அறிவிப்பினையும் வெளியிட்டோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களையும், நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 50 விழுக்காடு வேலைவாய்ப்பு அளிப்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளைப் (50 விழுக்காட்டுக்கும் மேலாக) பெண்களுக்கு ஒதுக்கி, அவர்கள் இன்று வணக்கத்துக்குரிய மேயர்களாகச் செயலாற்றும் நிலையை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஒதுக்கப்பட்ட 50 விழுக்காட்டுக்கும் மேல் பெண்கள் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர் என்பது இதுவரை இல்லாத சாதனை ஆகும்.
இத்துடன், இந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-ஐ வெளியிட்டோம்.
• அதில், பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல்.
• வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
• வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.
• அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதிசெய்தல்.
• பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
• பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
• தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.
• நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
• மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
ஆகிய கோட்பாடுகளை இலக்காக வைத்துச் செயல்படத் திராவிட மாடல் அரசு தீர்மானித்துள்ளது.
பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை என்ற முழுமையான புரிதலுடன், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில், நமது திராவிட மாடல் அரசு, பெண்கள் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது.
சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.