முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததை அடுத்து மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல்,
நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் என பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வரும் திட்டங்களாக உள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் வகையில் ‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இந்த புதிய திட்டத்தி விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். அவரது x சமூகவலைதள பதிவில்,”எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்.
விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில்” என தெரிவித்துள்ளளார்.