சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி தமுஎகச நடத்திய மாநாட்டில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதை பா.ஜ.கவினர் வேண்டும் என்றே பிரச்சனையாக்கினார்கள். ஒன்றிய அமைச்சர்கள் வரை எதிரிவித்தனர்.
இதையடுத்து சானாதம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அம்மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, எம்.பி ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள்? என விளக்கம் கேட்டு இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அனித சுமந்த் விசாரணை நடத்தி வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்ற போதும், மனுதாரர் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்குகளை முடித்து வைத்தார்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, அந்த கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களையே தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொது இடங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், உண்மை விவரங்களின் அடிப்படையில் துல்லியமாக இருக்க வேண்டும். எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் எந்த தகுதியில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்கும்படி உத்தரவிட முடியாது. மனுதாரர்கள் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டனர்.