தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது. அந்த ஆலையை மூடி ஐந்து ஆண்டுகளான நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று இறுதி அமர்வு வழக்கு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்தார். ஸ்டெர்லைட் ஆலை காரணமாக ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர், மண் மாசு குறித்த குறிப்புகளையும் வழங்கினார். 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஜிப்சம், காப்பர் ஸ்லாக் ஆகியவற்றை ஆலை நிர்வாகம் நீக்காதது குறித்த விரிவான விபரங்களையும் தாக்கல் செய்தார்.
பின்னர் சுற்றுச் சுழல் ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் வாதிட்டார். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சுழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாசு மட்டுமல்லாமல் சல்பர் டை ஆக்சைடு கசிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் முழுமையான விதிமீறல்கள் நடந்துள்ளது. எல்லா உண்மைகளும் ஆதாரமாக உள்ளன என்று கருத்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரிதான் என்று தீர்ப்பளித்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.