கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பாக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தேவராஜாதிடல், கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொது செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றனர்.
அப்போது பேசிய அவர், “கிருஷ்ணகிரி மாவட்டம் திமுக கோட்டை. திமுக தலைமைக்கு கட்டுப்பட்ட மாவட்டம். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்டாளர் 1.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நிலையில், ஒருவேளை இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம்.
ஒன்றிய அரசு இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் இந்தி திணிக்க நினைக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தால் 39 தொகுதிகளில் 25 தொகுதிகளாக குறையும். அதனால் தான் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இது குறித்து தீர்மானம் கொண்டுவந்துள்ளார் என்றார். இந்த தொகுதிகள் சீரமைப்பு தீர்மானம் கொண்டு வந்தது மூலம்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரை மிஞ்சிவிட்டார்.
ஒன்றிய அரசு கோவில் கட்டியதை மட்டும்தான் காட்டுகிறது. மக்களுக்காக செய்த திட்டங்களை காட்ட முடியுமா? ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டிய நாடாளுமன்ற கட்டிடத்தை மாற்றி, குடிசை வீடு மாதிரி புதிய நாடாளுமன்றம் ஒன்றைக் காட்டியுள்ளனர். மேலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது சோனியா காந்தியை பிரதமர் பதவி ஏற்க வேண்டும் என்று கேட்டபோது வேண்டாம் என்று சொன்னவர் தியாகி சோனியா காந்தி. அவரைப் பார்த்து வாரிசு அரசியல் செய்கின்றனர் என பேசுகின்றனர் என வருத்தம் தெரிவித்தார். எனவே பாசிசத்தை வீழ்த்தி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பேசினார்.