சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, "நான் முதல்வன்" திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ஸ்கௌட் (Scout) திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 25 இளநிலை பட்டதாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் தொடர்பான திறன் பயிற்சி இங்கிலாந்து துர்காம் பல்கலைகழகத்தில் வழங்கப்படவுள்ளதையொட்டி, அதன் அடிப்படையில் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பிற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் – இளம்பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் ரூ.8.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்புக்குரிய அலுவலகத்தை, இன்று திறந்து வைத்தோம்.
நம் முதலமைச்சர் அவர்களின் கனவுத்திட்டங்களில் முதன்மையான திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் நடத்தப்பட்ட திறன் பயிற்சியின் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 25 இளைஞர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை இன்று வழங்கி வாழ்த்தினோம்.
இந்த நிகழ்வின் போது, இங்கிலாந்தின் துர்காம் பல்கலைக்கழகம் மூலம் Artificial Intelligence தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – British Council இடையேயும், பயிற்சி – வேலைவாய்ப்பை உருவாக்க, Tech mahindra, oracle நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மேலும், மாவட்ட அளவிலான திறன்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றிய அளவிலான திறன் பயிற்சிகளையும் இன்று தொடங்கி வைத்தோம். தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவிலான திறன் பயிற்சியையும் – வேலைவாய்ப்புகளை பெறவும் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று உரையாற்றினோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொருமொரு சமூக வலைதள பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, “'உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிலையை நாம் எட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, அதற்குரியத் திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்கள்.
இதற்காக நமது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் மூலம் ஓராண்டில் மட்டும், 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக்கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகளை தொடங்கினோம்.
இந்த நிலையில், நம்முடைய திராவிட மாடல் அரசின் முன்னெடுப்பில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களின் மூலம், மொத்தம் 5,497 மாணவ - மாணவியர்களுக்கு ரூ.315.79 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கழக அரசின் முயற்சியால் 16,688 மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ரூ.1,022 கோடி அளவுக்கு கல்விக்கடன் சென்றடைந்துள்ளது. இந்தத் தொகை என்பது ஒட்டுமொத்த நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு - அறிவுப் புரட்சிக்கான முதலீடு என்பதில் பெருமை கொள்கிறோம். கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், படிப்பில் சாதித்து, வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.