நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க மறுத்தார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் தனது உரையை புறக்கணித்தார்.
வழக்கமாக தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாது. மாறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடையும். ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று இதனை ஒரு காரணமாக காட்டி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து தனது மாண்பை மீறியுள்ளார். ஆளுநரின் இந்த செயல் தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஆளுநரை அழைத்து சட்டமன்ற முதல் கூட்டத்தொடரை தொடங்கினோம். கேரளா ஆளுநர் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு முடித்து விட்டார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் உரையிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் சொந்தமான கருத்துகளை சொல்லிவிட்டு அமர்ந்து விட்டார். உரையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை ஆளுநர் கேட்கலாம். அதற்கு நாம் விளக்கம் சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஆனால் தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதல் இடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரத்துடன் சொல்லும்போது அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி ஆளுநருக்கு இல்லை என்பதுதான் தெரிய வருகிறது. ஜனநாயகத்தை மதிப்பவர் முதலமைச்சர். கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட ஆளுநர் என்ற பதவிக்கு ஜனநாயகத்தின் நாம் உரிய மரியாதை தர வேண்டும் என்று மதிப்பு கொடுக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பதால்தான் எத்தனை நிகழ்வுகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரத்துடன் ஆளுநர் முறையில் நாங்கள் தெரிவித்து இருந்தோம். ஆளுநர் உரை இல்லாமல் நாங்கள் நினைத்திருந்தால் செய்திருக்கலாம். ஜனநாயகத்திற்கு எதிரானவர் முதலமைச்சர் அல்ல; அவர் அதை மதிக்கிறார். அதனால்தான் ஆளுநர் பதவிக்கு மரியாதை கொடுத்து அவரது உரையை இடம்பெற செய்தோம்.
எங்களை யார் அசிங்கப்படுத்த நினைக்கிறார்களோ, அவர்களை மக்கள் அசிங்கப்படுத்துவார்கள். ஆளுநர் ரிமோட் போன்று இருக்கிறார். ரிமோட் இயக்குபவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் அவர் இயங்குவார். சுயாட்சியாக இயங்க முடியாது.
ஆளுநர் குறித்து எடப்பாடி பழனிசாமி ஏதாவது விமர்சனம் செய்தாரா? இல்லை. ஏனென்றால் அவர் கொத்தடிமை. எதை செய்தாலும் அடுத்த நாள் அவர்களுக்கு ரெய்டு வந்துவிடும் என்பதால் பயந்துதான் பேச முடியும். ஆனால் திமுக யாருக்கும் பயந்து பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அடிமைகள். அதனால் அவர்கள் பயந்து கொண்டுதான் பேட்டி கொடுப்பார்கள்.
ஆளுநர் நடந்து கொண்டதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜக குறித்தும் ஆளுநர் குறித்தும் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்கள். சாவர்க்கர், கோட்சே என சபாநாயகர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் கூறியுள்ளார். சபாநாயகரே அதை நீக்கிவிடுவதாக கூறியுள்ளார். ஆளுநரோடு அனுசரித்து போகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால் ஆளுநர் ரவிதான் அதை விரும்பவில்லை.” என்றார்.