நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கவிருந்தது. அந்த வகையில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி ஆளுநரிடம் அவரது உரை கொடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு உப்புசப்பில்லாத காரணங்களை கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்துள்ளார் ஆளுநர்.
குறிப்பாக கூட்டதொடர் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி உரையை வாசிக்காமல் புறக்கணித்துள்ளார். வழக்கமாக தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாது. மாறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடையும்.
ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது கூட்டத்தொடர் நடைபெறும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற ஒரு காரணமாக சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் சாதனைகளும் அந்த உரையில் இடம்பெற்றிருந்ததாலும், அதில் தார்மீக ரீதியாக தனக்கு உடன்பாடில்லை என்பதாலும் வாசிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கையானது தற்போது கண்டனங்களை வலுத்து வருகிறது. ஏனெனில் இதுபோன்று ஆளுநர் செய்வது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு கூட்டத்தொடரின்போது கூட, ஆளுநர் உரையில் இருந்த தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் பெயரை வாசிக்க மறுத்தார். மேலும் பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சி போல் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து ஆளுநரின் செயல் தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் எதிராகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி உரையை வாசிக்க மறுத்த அதே ஆளுநர் ஆர்.என்.ரவி, கூட்டத்தொடர் நிறைவடையும் நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே பேரவையை விட்டு எழுந்து வெளியேறியுள்ளார். தேசிய கீதம் மீது பற்று கொண்டிருக்கும் ஆளுநர், அது இசைக்கப்படுவதற்கு முன்பே பேரவையில் இருந்து வெளியேறியது அனைவர் மத்தியிலும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியதோடு கண்டனங்களை வலுத்துள்ளது.
இந்த ஆண்டில் கேரளா சட்டப்பேரவையில் கூட, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தனது உரையை பாதியில் முடித்து சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.