முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் சென்னை செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சியை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இம்மலர்க் கண்காட்சியில் சுமார் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட வண்ணமயமான மலர்களுடன் பூத்துக்குலுங்கும் மலர்ச்செடிகளை கொண்டு கண்களை கவரும் வண்ணம் பல்வேறு அலங்காரங்கள், வளைவுகள் மற்றும் வண்ணமலர் படுக்கைகள், பொம்மைகள், படகு, கடிகாரம், செங்குத்துத் தோட்டம், யானை, அன்னப்பறவை, வண்ணத்துப்பூச்சி, ஆமை போன்ற உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
மலர்க் கண்காட்சியில் பெட்டுனியா, சால்வியா. செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், ஜினியா, டொரினியா, கோழிக்கொண்டை, லில்லியம், டெய்சி, கேலண்டுலா, வாடாமல்லி, கனகாம்பரம், பால்சம், சூரியகாந்தி, காஸ்மோஸ், சம்பங்கி, நித்திய கல்யாணி, வெர்பினா, சங்குப்பூ, அல்லிசம் போன்ற மலர்ச்செடிகளும் மற்றும் டிரசினா, பைகஸ், கோலியஸ், பாய்னசெட்டியா, அரேலியா, கார்டிலைன், அக்லோனிமா, ஃபில்லோடென்ட்ரான், எராந்திமம் போன்ற பல்வேறு இலை அழகு செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் தமிழ்நாடு காவல் ஆயுதப்படை கூட்டுகுழல் முரசு இசை பிரிவு இசைகுழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர். இம்மலர்க் கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டு செம்மொழிப்பூங்கா வளாகத்தின் உள்ளேயும் இணையதளம்(https://tnhorticulture.tn.gov.in/cfs-2024/) மூலமும் விற்பனை செய்யப்படும்.