சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முன்னிலையில் அனைத்து மாவட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயி்லாக ஆலோசனை நடைபெற்றது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு தயாராக உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்துவதுவதற்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களவிட கூடுதல் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுவாக ஒரு மாநிலத்தில் 100% வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை இருக்கிறது என்றால், 125 சதவீதம் முதல் 130 சதவீதம் வரை வாக்குப் பெட்டிகள் தயாராக வைத்திருப்போம். தமிழகத்தில் 130 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன.
அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்தும் விவி பேட் பொருத்தியுள்ளோம். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பாதுக்காப்பு அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எந்த வேட்பாளர் போட்டியிடுகிறார் போன்ற தரவுகள் அடிப்படையிலும் பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். இந்தியத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டிற்கு வரும்போது அரசியல் கட்சி பிரதிநிதியுடன் ஆலோசனை நடத்துவார்” என்றார்.