தமிழ்நாட்டு சிறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் சிபிஐ(எம்) கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு சிறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. அறிஞர் அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுகளையொட்டி சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்ட பின்பும், இவர்களை விடுதலை செய்ய கடந்த ஆட்சி காலத்தில் மறுத்து வந்தனர்.
சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சிபிஐ(எம்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள், சிறைவாசிகளின் குடும்பங்கள், சிறுபான்மை மற்றும் மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் எழுப்பிய குரல்கள் கண்டு கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு குழு அமைத்து, அக்குழுவின் ஆலோசனைப்படி இச்சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தன.
பல மாதங்கள் இழுத்தடித்த ஆளுநர், தற்போது நீண்ட காலமாக சிறையில் உள்ள 10 சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஒப்புதல் அளித்த அடிப்படையில் தற்போது இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது விடுதலையை வரவேற்பதுடன், விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இதேபோல, நீண்டகாலமாக அடைபட்டுள்ள சிறைவாசிகளையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.