தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த 27-ம் தேதி இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்க்கு சென்றடைந்தார்.
பின்னர் அங்கு ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக முதலமைச்சரிடம் உறுதி அளித்துள்ளது. மேலும் ஆக்சியோனா நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. அதேபோல் ஸ்பெயினின் பல முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான
Gestamp, Talgo, Edibon உள்ளிட்ட நிறுவனங்களிடம் தமிழ்நாட்டில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. Edibon நிறுவனத்துடன் ரூ. 540 கோடி முதலீட்டிற்கு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது மகிழ்ச்சிக்குரியது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளுடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. சில நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் தமக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.