சென்னை மேற்கு ஜோன்ஸ் சாலையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் தந்தை பெரியார் 50, பேரறிஞர் அண்ணா 55 நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பிரச்சார செயலாளர் சீனி விடுதலை அரசு, துணை தலைவர் வழக்கறிஞர் செ.துரைசாமி, தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையிற்றினார்கள்.
அப்போது திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா பேசியதாவது, “அண்ணா பெயரை கேட்டாலே சங்கிகள் துடித்து போகிறார்கள். தமிழ்நாட்டின் அடையாளம் என்று சொன்னால் அது அண்ணா தான், தமிழ் இனத்துக்கு தன்னை அர்ப்பணித்தவர். பெரியார், அண்ணா ஒரு சித்தாந்ததை கட்டி அமைக்கவில்லை என்றால் உத்திர பிரதேசத்துக்கு நாம் வேலை பார்க்க சென்று கொண்டு இருப்போம். அண்ணா பேச்சு - எழுத்து ஒரு அறிவு கொடை; அனைவரும் படிக்க வேண்டும்.
ராபின் சென் பூங்காவில் அண்ணா பேசுகிறார், ‘பெரியார் தான் எங்கள் தலைவர், நாங்கள் இங்கே நடும் மாமரம் பெரும் இயக்கமாக இருக்கும்’ என்று சொன்னார். மானுட விடுதலைக்கு உழைத்தவர் தந்தை பெரியார். விசில் அடித்தான் பூச்சிகளாக சீமான் தம்பிகள் உள்ளனர். அவர்களுக்கு அண்ணாவைப் பற்றி பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாது.
அன்று அண்ணா நாடாளுமன்றத்தில் வைத்த வாதம்தான் இன்று நாம் இரு மொழி பேசுகிறோம். இன்று வரை சங்கிகளால் தொட்டு பார்க்க முடியாத ஒருநாடுதான் அண்ணா வைத்த தமிழ்நாடு திராவிட நாடு. சீமானை நல்ல மனநோய் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட பூர்வமாக அங்கீகாரம் கொடுத்தது அண்ணா. அண்ணாதான் நம்முடைய எதிர்காலம் என்று சொன்னவர் கலைஞர், இன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நம்முடைய முதல்வர் ஆட்சியை பற்றி எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
நக்கி பிழைக்கும் கும்பல் தியாகிகள் என்று சொல்கிறார்கள். இராமனுக்கு தமிழ்நாட்டில் கோயில் கிடையாது, இராமன் தமிழ்நாட்டின் கடவுள் கிடையாது. முருகன் இருக்கிறான் தமிழ் கடவுள். கடவுள் அழைக்காமலேயே விரதம் இருப்பார்கள்; கடவுள் அழைக்காமலே கோவிலுக்கு செல்வார்கள் தமிழர்கள்.
இந்த சங்கி கூட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பாக இதே தைப்பூசத்தை கொண்டாடினார்கள். பிளாஸ்டிக் குச்சியில் பிவிசி பைப்பில் பிளாஸ்டிக்கில் அட்டை ஒட்டி இதுதான் முருகவேல் என்று வானதி சீனிவாசன், ஆட்டுக்குட்டி அண்ணாமலை, எல் முருகன் வரை பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். என்னடா பிவிசி பைப்பில் செய்து நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் தாங்கள் தைப்பூசத்தை கொண்டாடுகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் இந்த வருடம் ஏன் கொண்டாடவில்லை? என்று கேட்டால், நாங்கள் இராமனுக்கு சென்று விட்டோம் என்று சொல்கிறார்கள்.
காளியாத்தா, முருகப்பெருமான் அவர்களுக்கு கடவுள் இல்லை; நம்ம ஊரு கருப்பண்ணசாமி அவர்களுக்கு கடவுள் இல்லை; அவர்கள் எதிர்க்கும் ஒரே தலைவர் நம்முடைய இராவணன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.” என்றார்.