நாளை நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்களுக்கு விலக்களிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இந்த தேர்வில் தமிழ் கட்டாய தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
அதன்பின்னர், ஜனவரி 7ம் தேதி நடைபெற இருந்த கட்டாய தமிழ் தகுதித்தேர்வு, புயல் - மழை காரணமாக பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழ் கட்டாய தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து, பிரதான தேர்வுக்கு அனுமதி வழங்கக் கோரியும், கட்டாய தமிழ் தகுதித் தேர்வு எழுத வகை செய்யும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் 2023ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரியும், மொழிச்சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில், அரசுப் பணிக்கு தகுதி பெற்று தமிழ் மொழியில் தகுதி பெற்றிருக்காவிட்டால், பணி நியமனத்துக்கு பின் இரு ஆண்டுகளில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, போட்டித் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்துள்ளதன் மூலம், மொழிச் சிறுபான்மையினர் அரசுப் பணி பெறும் வாய்ப்பு பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கட்டாய தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி அரசுக்கு முறையிட்டும், எந்த பதிலும் இல்லை எனவும், தெலுங்கு மொழியில் படித்த மனுதாரர்கள், தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான, தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர், சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், அதன் அடிப்படையில் மூன்று போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 41 ஆயிரத்து 485 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால், அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும் எனவும், மனுதாரர்களின் கோரிக்கையை அரசு தான் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூறி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர்.மேலும், மனுதாரர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு மார்ச் 7ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.