தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். அப்போது இவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வரவேற்பு அளித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் தற்போது இவர் திருப்பத்தூருக்கு நடைபயணம் மேற்கொண்டார். அப்போது சுமார் 50 அடி உயர பாஜக கொடி கம்பம் சட்டென்று சரிந்து அங்கிருந்த நபர் ஒருவர் மேல் விழுந்து அவரது மண்டை உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு அடிபட்டவர் எப்படி இருக்கிறார் என்றும் பார்க்காமல் பாஜக தலைவர் அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்து சென்ற நிகழ்வு அனைவர் மத்தியிலும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதிக்கு இன்று அண்ணாமலை சென்றிருந்தார். அப்போது அண்ணாமலையை வரவேற்க பாஜகவினர் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர் உள்ளிட்டவையை வைத்துள்ளனர். அந்த சமயத்தில் கொடி கம்பம் பக்கத்தில் அண்ணாமலை நிற்கும்போது, அவரை அங்கிருந்த மக்கள் சூழ்ந்தனர்.
அந்த நேரத்தில் அந்த 50 அடி உயர பாஜக கொடி கம்பம் சட்டென்று சரிந்து, அங்கிருந்த தொண்டர்கள் மேல் விழுந்தது. இதில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த துணை வியாபாரி கலீல் என்பவரது மண்டை உடைந்து இரத்தம் சொட்டியது. இரத்தம் வழிய நின்ற அவரை அருகில் இருந்தவர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அப்போது கூட அவரை கண்டும் காணாததும் போல், அங்கிருந்து அண்ணாமலை நகர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது மண்டை உடைந்த நிலையில் இருந்த அந்த நபர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுமார் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.