சென்னை அண்ணா நகரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களை ஏமாற்றும் பாஜகவின் அரசியலை வடமாநில மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. வட மாநிலங்களும் விழிப்புணர்வு பெற்று வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசானது இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. இதன் மூலமாக இந்தி பேசும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறது பாஜக. பாஜகவுக்கு அதிகம் வாக்களிப்பவர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்த இந்தி பேசும் மக்கள் என்றால், அவர்களுக்காவது ஏதாவது நன்மை செய்துள்ளார்களா?
கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்களா? ஊரடங்கு செய்யப்பட்டதால் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு கூட இந்தி பேசும் மக்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தராத கட்சி தான் பாஜக. பல நூறு கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து தங்களது ஊருக்கு போன கொடுமையைப் பார்த்து நாம் கண்ணீர் விட்டோம். சாரை சாரையாக நடந்து போன இந்தி மக்களுக்கு நீங்கள் காட்டிய இரக்கம் என்ன?
மக்களை ஏமாற்றும் பாஜகவின் அரசியலை வடமாநில மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. வட மாநிலங்களும் விழிப்புணர்வு பெற்று வருகின்றன. 'எங்களுக்கு படிப்பு தான் தேவை' என்று இந்தியில் பேசும் சிறுவன் ஒருவனின் காணொலி சமூக வலைதளங்களில் நான்கைந்து நாட்களாக பரவி வருகிறது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற சேலம் இளைஞர் அணி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை நீங்கள் அனைவரும் கவனித்திருப்பீர்கள். ''இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்'' என்பது இளைஞரணியின் முக்கியமான தீர்மானம் ஆகும். இந்த பரப்புரையை அனைவரும் செய்தாக வேண்டும். பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவை அம்பலப்படுத்துவோம். பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவை அம்பலப்படுத்துவோம்.
இந்தியா கூட்டணியின் வெற்றியில் தான் இந்தியாவின் எதிர்காலம் அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஆட்சி என்பது உண்மையான கூட்டாட்சியாக அமையும். அத்தகைய ஆட்சியில் அனைத்து இனம் - மொழி - மத மக்களும் சம உரிமை கொண்டவர்களாக வாழ்வார்கள். வாழ வைப்போம். எல்லார்க்கும் எல்லாம் என்ற சமநிலைச் சமுதாயத்தை அமைக்க மொழிபோர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதி ஏற்போம். வென்று காட்டுவோம்.” என்றார்.