நாள்தோறும் சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்தே இயங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்து வந்தது.
மேலும் இவ்வாறு இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள், சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களில் இந்த பேருந்துகளும் சிக்கி, மேலும் மக்களுக்கு இடையூறாகவே இருந்து வந்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்த இந்த பிரச்னையை தமிழ்நாடு அரசு முடிக்க நினைத்து, புதிய பேருந்து நிலையத்தை அமைக்க திட்டமிட்டது.
அதன்படி கிளம்பாக்கத்தில் 'கலைஞர் நூற்றாண்டு நினைவுப் பேருந்து' நிலையம் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாக அறியப்படும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளும் இங்கு இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படக்கூடாது என்றும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருந்தது.
அதோடு இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபுவும், "கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் இன்று முதல் தடை செய்யப்படுகிறது. அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக செயல்படும். ஏற்கனவே இம்மாதம் 24-ம் தேதிக்கு பிறகு நாங்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்படுவோம் என அவர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். ஆகையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல அரசு செயல்பட முடியாது. மக்களுக்கு ஏற்றார் போல்தான் அரசு செயல்படும்." என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது ஆம்னி பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், "சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. அதற்கு ஏற்றாற்போல் RED BUS, ABHI BUS உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.