சென்னை சின்னமலை எல்.டி.ஜி சாலையை சேர்ந்தவர் லூர்து ராஜ் - மோனிஷா தம்பதி. லூர்து ராஜ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஆருண் ராஜ் என்ற வயது சிறுவனும், 2 வயது பெண் பெண் குழந்தையும் உள்ளனர். இதில் 7 வயது ஆருண் ராஜ் என்ற சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சூழலில் நேற்று மாலை சிறுவன் ஆருண் ராஜ் பள்ளியை முடித்து விட்டு வழக்கமாக வீடு திருப்பினார். பிறகு தெருவில் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பந்தானது அருகே பூட்டி கிடந்த வீட்டின் உள்ளே விழுந்துள்ளது. இதனால் சிறுவன் பந்தை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தின் மீது ஏறி காம்பவுண்டுக்குள் குதித்து சென்றுள்ளார்.
அப்போது பந்து அங்கிருந்த நீர் சேமிப்பு தொட்டியில் கிடந்ததை கண்ட சிறுவன், அதனை எடுக்க முயன்றபோது தவறி உள்ளே விழுந்தார். இதைத்தொடர்ந்து சிறுவனால் மூச்சு விட முடியாமல் திணறிய நிலையில், சுமார் 6 அடி நீர் சேமிப்பு தொட்டியில் சிக்கிய சிறுவன் ஆருண் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நீ்ண்ட நேரமாகியும் சிறுவன் வராத காரணத்தினால் பயந்துபோன நண்பர்கள், இதுகுறித்து ஆருண் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உள்ளே சென்று பார்க்கையில் சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி படுத்தினர்.
இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பூட்டி இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் யார்? எனவும் நீர் சேமிப்பு தொட்டியை மூடாமல் விட்டது ஏன்? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.