தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்கியது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் அணியின் மாநாட்டு திடல் முன்பு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. இந்நிகழ்வில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் மாநாட்டு திடலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.
இந்நிலையில், என்னை உருவாக்கிய பாசறை இளைஞர் அணி என நெகிழ்ச்சியுடன் தி.மு.க இளைஞரணி மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "1980 ஜூலை 20ல் மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க இளைஞரணி தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே ஓர் அரசியல் கட்சியில் இளைஞரணி தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை. தி.மு.கவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது.
நான் வளர்ந்த என்னை உருவாக்கிய பாசறைதான் இளைஞர் அணி. தற்போது இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். முத்தமிழறிஞர் கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிகையை நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும் என கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.