பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் துணை வேந்தர் ஜெகன்நாதனை பாதுகாக்க நினைக்கிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? என தி.மு.க மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து எழிலரசன் எம்.எல்.ஏ அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,"கல்வியை காப்போம்.. தேசிய கல்வி கொள்கையை நிராகரிப்போம்.. இந்தியாவைக் காப்போம்.. பாஜகவை எதிர்ப்போம்" என்ற முழக்கத்துடன் இந்தியா கூட்டணியின் மாணவர்கள் அணி சார்பில் ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் மாணவர் பேரணி நடக்க உள்ளது.
தி.மு.க மாணவர் அணி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிகளின் மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட 16 மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து United Students of India என்ற கூட்டமைப்பின் சார்பில் 25000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளது.
சேலம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகன்நாதன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட ஒரே நாளில் ஜாமினில் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்று உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் நாளை சேலம் பல்கலைக்கழகத்தில் ஜெகன்நாதன் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேச உள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மேலும் துணை வேந்தர் ஜெகன்நாதனை பாதுகாக்க நினைக்கிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளை பெரியார் பல்கலைக்கழகம் வருகை தரும் ஆளுநரைக் கண்டித்து தி.மு.க மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் எஸ்.எப்.ஐ உள்ளிட்ட பல மாணவர் அமைப்புகள் பங்கேற்கின்றன" என தெரிவித்துள்ளார்.