அதிமுக அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க வழக்கம்போல் பேருந்துகளை இயக்குவீர் என தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும் அரசு ஒய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு.
இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.